வார இறுதி நாட்களையொட்டி 1,040 சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்: 14,709 பேர் முன்பதிவு, போக்குவரத்து துறை தகவல்

சென்னை: வார இறுதி நாட்களையொட்டி நாளை முதல் 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் இதில் பயணிக்க 14,709 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்து துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 340 பேருந்துகளும், நாளை மறுநாள் 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 பேருந்துகளும் நாளைமறுநாள் 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்திலிருந்து நாளை 20 பேருந்துகளும், நாளை மறுநாள் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் அதாவது நாளை 6,233 பயணிகளும், நாளை மறுநாள் 2,966 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 5,510 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: