தலைமை செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்: அரசு அலுவலக உதவியாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும் என்று அரசு அலுவலக உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க தலைவர் எஸ்.மதுரம், அகில இந்திய தலைவர் கே.கணேசன் மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தலைமை செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக பூர்த்தி செய்திட வேண்டும். அதுபோல அடிப்படை பணியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சியில் தற்போது உள்ள ஆணைகளை ரத்து செய்து முன்புபோல நிரந்தர பணியாளர்களாகவும், காலி பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்.

12,527 ஊராட்சிகளில் பணியாற்றுகின்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், பொது நூலகத்துறை துப்புரவு பணியாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு அலுவலகங்களில் தனியார்மயத்தினை ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணி நியமனம் செய்திட வேண்டும். இந்த 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 6ம் தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலக உதவியாளர்கள் – அடிப்படை பணியாளர் சங்கம் மற்றும் இணைப்பு சங்கங்களும் இணைத்து போராட்ட ஆயத்த கூட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: