சென்னை: 2025-26ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்ற 421 கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டன. மொத்தம் உள்ள 1 லட்சத்து 90 ஆயிரத்து 160 இடங்களில் சிறப்புப் பிரிவு கலந்தாய்வைத் தொடர்ந்து, பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெற்றது. சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் பொது கலந்தாய்வின் மூன்று சுற்றுகள் முடிவடைந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டில் 14 ஆயிரத்து 143 மாணவர்களும், பொதுப்பிரிவில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 338 மாணவர்களும் என ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 481 மாணவர்கள் கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே துணைக்கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக ஜூலை கடைசி வாரத்தில் இருந்து ஆகஸ்ட் 14ம் தேதி வரை பெறப்பட்டன. இதற்கு 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மொதுக்கலந்தாய்வு முடிந்து காலியாக உள்ள 44,679 இடங்களுக்கு இந்த துணைக்கலந்தாய்வானது நடைபெற உள்ளது. அதன்படி, பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க தவறிய மாணவர்கள் ஆகியோருக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்கி 23ம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது. துணை கலந்தாய்வை முடிவடைந்த பிறகு, பொறியியல் படிப்பில் எஸ்சி-அருந்ததியர் ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களில் எஸ்சி மாணவர்கள் சேருவதற்கான சிறப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 25 மற்றும் 26ம் தேதி நடைபெறும்.
26ம் தேதியுடன் ஒட்டுமொத்த கலந்தாய்வு பணிகள் முடிக்கப்படும். இந்தக்கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் அனைத்து இடங்களும் நிரம்பி உள்ளது. நடப்பாண்டில் அண்ணா பொறியியல் கல்லூரியில் 15 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டது. மேலும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகள் அதிகம் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை உயர்த்தி அளிக்கப்பட்டது. பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் பாடத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களும் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகுத்துள்ளது என அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* நடப்பாண்டில் 39 கல்லூரிகளில் 100 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன. அவற்றில் 17 சுயநிதி கல்லூரிகள்
* ஒரு இடம் கூட நிரப்பப்படாத கல்லூரிகள் 3. கடந்த ஆண்டு 7 கல்லூரிகள் இருந்தன.
* கல்லூரிகளின் எண்ணிக்கை நிரம்பிய இடங்களின்
எண்ணிக்கை சதவிகிதத்தில்
118 95%
164 90%
205 80%
292 50%
32 10 சதவிகிதத்திற்கும் குறைவு
19 10 இடங்களுக்கும் குறைவு
* பொறியியல் கலந்தாய்வில் நிரம்பிய இடங்கள் மாவட்ட வாரியாக
கோயம்புத்தூர் 85.06%
சென்னை 78.13%
திருநெல்வேலி 67.63%
திருச்சி 66.49%
மதுரை 55.71%
100 சதவிகித இடங்கள் நிரம்பிய அரசு கல்லூரிகள்
1. சென்னை அண்ணா பல்கலை 4 வளாக கல்லூரிகள்.
2. கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி.
3. தியாகராஜர் பொறியியல் கல்லூரி.
4. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி.
5. கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி.
6. சேலம் அரசு பொறியியல் கல்லூரி.
7. காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி.
8. அண்ணா பல்கலைக் கழக வளாகம், கோயம்புத்தூர்.
9. அரசு பொறியியல் கல்லூரி – பர்கூர், திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி,தேனி.
10. அண்ணா பல்கலைக் கழக வளாகம், திருநெல்வேலி.
11. மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி.
12. அண்ணா பல்கலைக் கழக வளாகம், மதுரை.
13. இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம், சேலம்.
