சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை, திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போக்குவரத்து துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு 2025-2026ம் கல்வியாண்டுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 25 பள்ளி வளாகங்களில் இருந்து மாணவ, மாணவிகளுக்காக இயக்கப்படும் 50 சிறப்பு பயண நடை பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்து, மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாலை நேரங்களில் பள்ளி வளாகத்தின் உள்ளிருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு, உரிய வழித்தடத்தில் இயக்கப்படும்.
இதனால் மாணவர்கள் பாதுகாப்பாகவும், நெரிசலின்றியும் பயணிக்க இயலும். இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், போக்குவரத்து துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர், சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன், மாநகராட்சி ஆளுங்கட்சி துணை தலைவர் காமராஜ், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
