சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பி.மகாதேவன் பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இந்திய விடுதலை போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 80ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சத்திய மூர்த்திபவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர்களது உருவ படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:
கூட்டுறவு முறையில் தூய்மைப் பணியாளர்கள் சேர்க்கப்பட்டு பணி வழங்க வேண்டும். தற்போது தமிழ்நாட்டை பிடிப்பதற்கு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா படையெடுகிறார்கள். வாக்கு திருடர்கள் தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வருகிறார்கள். அவர்களிடம் இருந்து தமிழகத்தை பாதுக்காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பொருளாளர் ரூபி மனோகரன், ஊட்டி கணேஷ் எம்எல்ஏ., துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
