மதுரை: நீர்நிலை பராமரிப்பு பணி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையில் மனு அளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்காந்திமதிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2020ல் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் நீர்நிலைகளை பராமரித்து பாதுகாப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக அன்றைய ஆட்சியில், 4 ஆண்டுகளுக்கு ரூ.928.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நீர்நிலைகளில் களிமண், சவடுமண் ஆகியவற்றை எடுப்பதை முறைப்படுத்த அரசாணை 50 வெளியிடப்பட்டது.
பொதுவாக குடிமராமத்து பணிகள் அந்தந்த பகுதி விவசாயிகள், நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மூலமாகவே ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் 2014ம் ஆண்டிற்குப் பிறகு நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடத்தப்படாததால், ஒவ்வொரு மாவட்டத்திலும் 7 பேரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு குடிமராமத்து பணிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அந்த நபர்கள் அரசியல்வாதிகளோடு தொடர்புகொண்டு முறைகேடு செய்பவர்களாகவே உள்ளனர். ஒரே நீர்நிலையை குடிமராமத்து திட்டம், தாய் திட்டம் மற்றும் அரசாணை எண் 50 ஆகிய மூன்று திட்டங்களின் கீழும் பராமரிப்பதாகக் கூறி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நீர்நிலை முறையாக தூர் வாரப்படுவதில்லை. எனவே, இதனை சரி செய்ய நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலை விரைவாக நடத்துமாறும், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் குடிமராமத்து திட்டம், தாய் திட்டம், அரசாணை எண் 50 ஆகியவற்றின் கீழ் நடைபெற்ற நீர்நிலைகள் பராமரிப்பு பணிகள், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்துமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள்முருகன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில், ‘‘மனுதாரர் தனது மனுவில் நிதி முறைகேடு மற்றும் நிதி மோசடி தொடர்பாக ஏராளமான புகார்களை கூறியுள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடமோ புகார் மனு அளிக்காமல், நேரடியாக நீதிமன்றத்தில் பொதுவாக நிவாரணம் கோருவது ஏற்கத்தக்கதல்ல’’ என கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் புகார் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மனு அளிக்கலாம் எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்.
