நிலவை அடைய மூன்றாவது ஏவுதளம்: இஸ்ரோ தலைவர் தகவல்

காரைக்குடி: எதிர்காலத்தில் நிலவை அடையும் திட்டங்களுக்காக மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளோம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இது நாட்டின் விண்வெளி திட்டமான ககன்யானுக்கு முக்கிய படிக்கல்லாக அமையும். ஸ்பேஸ் டாக்கிங் எக்ஸ்பெரிமென்ட் மிஷன் மற்றும் 100வது ஜிஎஸ்எல்வி ஏவுதல் போன்ற பல்வேறு சாதனைகளை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து நிகழ்த்தியுள்ளோம்.

எதிர்காலத்தில் நிலவை அடையும் திட்டங்களுக்காக மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளோம். இது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான முன்னேற்றம். இந்தியா அனைத்து துறைகளிலும் அபார முன்னேற்றம் அடைந்துள்ளது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம். சுகாதாரத்துறையில் முன்னேறி சராசரி ஆயுட்காலம் 32 வயதில் இருந்து 72 ஆக உயர்ந்துள்ளது. 8.4 லட்சம் பள்ளிகள், 742 மருத்துவக்கல்லூரிகள், 4,351 பொறியியல் கல்லூரிகள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.135.13 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியா 2031க்குள் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வளரும். இவ்வாறு கூறினார்.

Related Stories: