சென்னை: ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(டிட்டோஜாக்) சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, டிட்டோஜாக் அமைப்பினரை அழைத்துப் பேசினார். டிட்டோஜாக் கொடுத்த 10 அம்ச கோரிக்கைகள் குறித்த விவரங்களை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கவனமுடன் கேட்டார். பின்னர் இந்த கோரிக்ககைளை உடனடியாக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துசென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து, டிட்டோஜாக் பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுத்து அறிவிப்பதாக டிட்டோஜாக் அமைப்பினர் தெரிவித்தனர். அதன்படி சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அலுவலகத்தில் பொதுக் குழு கூடியது.
அதன் தொடர்ச்சியாக டிட்டோஜாக அமைப்பின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கூறியதாவது: டிட்டோஜாக் சார்பில் 12 பேர் அமைச்சரை சந்தித்து 10 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசினோம். அதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு, பெண் ஆசிரியர்கள் பதவி உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, ஆசிரியர்களின் பதவி உயர்வு, தொகுப்பூதிய நியமனங்களை தவிர்த்தல், தணிக்கை தடையை நீக்குதல், நியமன ஒப்புதல், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்த அமைச்சர், 2 நாள் கால அவகாசம் தேவை என்று தெரிவித்தார். அதனால் டிட்டோஜாக் பொதுக் குழு கூடி ஆலோசனை நடத்தினோம். அமைச்சர் அவகாசம் கேட்டதால், 22ம் தேதி நடத்த இருந்த கோட்ட முற்றுகை போராட்டத்தை பொதுக் குழு ஒத்தி வைத்துள்ளது. இதையடுத்து, அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கும் முடிவை அடுத்து, 25ம் தேதி பொதுக் குழு மீண்டும் கூடி முடிவு எடுத்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம். இவ்வாறு டிட்டோஜாக் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்தது.
