இன்று நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார்: ஆளுநர் தேநீர் விருந்தை திமுக, கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை: நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளுக்கு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். இந்த அணிவகுப்பில் சிறப்பு காவல் படைகள், கேரளா சிறப்பு காவல்படை, காவல் பெண் கமாண்டோக்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு மூவர்ண தேசியக்கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். முன்னதாக, தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் கல்பனா சாவ்லா பெயரிலான விருதுகளை வழங்குகிறார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 9,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். முதல்வர் கொடியேற்றும் புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள். பேருந்து முனையங்கள், பேருந்து மற்றும் மெட்ரோ நிலையங்கள். வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருவள்ளூர், காட்பாடி, சேலம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாள பகுதிகளில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக சுதந்திர தினத்தையொட்டி இன்று மாலை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் அனைத்துக்கட்சி தலைவர்கள் தேநீர் விருந்து அளிப்பார். ஆனால், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்தே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது.

இதனால், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பார் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதேபோல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, மமக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளன.

Related Stories: