புனித யாத்திரை சென்ற போது பயங்கரம் காஷ்மீர் மேக வெடிப்பில் சிக்கி 46 பேர் பலி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் குறைந்தது 46 பேர் உயிரிழந்தனர். 167 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சசோட்டி கிராமம் உள்ளது. இமயமலை பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் இருந்து தான் மச்சைல் சண்டி மாதா கோயிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரையாக செல்வார்கள். ஜூலை 25 தொடங்கி செப். 5ஆம் தேதி வரை இந்த புனித யாத்திரை நடக்கும். இங்கு வரும் பக்தர்கள் 2 நாட்கள் சசோட்டி கிராமத்தில் இருந்து தான் பாதயாத்திரையாக செல்வார்கள். நேற்று யாத்திரை செல்வதற்காக பதிவு செய்த பக்தர்கள் சசோட்டி கிராமத்தில் கூடியிருந்தனர்.

அப்போது நேற்று பிற்பகல் ஒரு மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டு பெரு வெள்ளம் உருவானது. பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சமூக சமையலறை மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டது. அதோடு திடீர் வெள்ளத்தில் குடியிருப்புகள், கடைகள் மற்றும் பாதுகாப்பு புறக்காவல் நிலையம் உட்பட பல கட்டமைப்புகள் அடித்து செல்லப்பட்டன. இந்த திடீர் வெள்ளத்தில் 2 சிஐஎஸ்எப் வீரர்கள் உள்பட 46 பேர் பலியாகி விட்டனர். ஏராளமானோர் வௌ்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தொடங்கியது. இதில் சுமார் 167 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் 38 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மச்சைல் மாதா யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த மேக வெடிப்பில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு குழுக்கள் அங்கு விரைந்து சென்றுள்ளன. முதல்வர் உமர்அப்துல்லா உடனடியாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு நடந்ததை விளக்கி கூறினார். துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடமும் அமித்ஷா பேசினார். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை உதம்பூர் தளத்திலிருந்து மேக வெடிப்புப் பகுதிக்கு விரைந்துள்ளது. உதம்பூரின் எம்.பி.யான ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் உள்ளூர் எம்.எல்.ஏ.வுமான சுனில் குமார் சர்மா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை விரைவுபடுத்தி உள்ளனர்.

முதல்வர் உமர் அப்துல்லாவின் அலுவலகம், மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’கிஷ்த்வாரில் ஏற்பட்ட துயரமான மேக வெடிப்பு குறித்து முதல்வர் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் அலுவலகம் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளது, மேலும் நிவாரணம் மற்றும் மீட்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மீட்பு நடவடிக்கையை விரைவுபடுத்த காவல்துறை, ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படைக்கு உத்தரவிட்டுள்ளார். மீட்பு, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு 20 நாட்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எப்போது நடந்தது? எப்படி நடந்தது?
* மச்சைல் மாதா கோயிலுக்கு பாதயாத்திரை தொடங்கும் கிராமமான சசோட்டி கிராமத்தில் நேற்று ஏராளமான பக்தர்கள் கூடியிருந்த போது மதியம் 12 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த பேரழிவு ஏற்பட்டது. அங்கிருந்து சசோட்டியில் இருந்து மச்சைல் மாதா ஆலயம் 8.5 கி.மீ தூரத்தில் உள்ளது.
* சசோட்டி கிராமம் 9,500 அடி உயரத்திலும் கிஷ்த்வாரில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவிலும் உள்ளது. இமயமலை அடிவாரத்தில் உள்ள பல வீடுகளை திடீர் வெள்ளம் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
* இந்த திடீர் மேக வெடிப்பால் புனித யாத்திரைக்கு தயாராக இருந்த பக்தர்கள் சிக்கி பலியானார்கள். மேலும் கிராமத்தில் உள்ள மக்களும் பலியாகி இருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.

* ஜனாதிபதி முர்மு, ராகுல் காந்தி இரங்கல்
ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஏற்பட்ட பேரழிவில் ஏராளமானோர் உயிரிழந்தது மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,’ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஏற்பட்ட பேரழிவில் பலர் உயிரிழந்தது மற்றும் பலர் காணாமல் போனது பற்றிய செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது ’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* பஹல்காமிலும் பாதிப்பு
கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பால் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற பஹல்காமின் சில பகுதிகளையும் திடீர் வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள பிரிஸ்லான் மற்றும் பேட்கூட் சாலைகள், கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

* அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர் மோடி
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேக வெடிப்பால் பலர் பலியானது தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில்,’ ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவைப்படுபவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* மச்சைல் மாதா ஆலய பின்னணி
மச்சைல் சண்டி மாதா கோயில் அல்லது மச்சைல் மாதா என்று அழைக்கப்படும் கோயில் ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள பத்தர் மச்சைல் கிராமத்தில் உள்ள இந்து தெய்வமான துர்காவின் ஆலயமாகும். இது செனாப் நதியின் துணை நதிகளுக்கு அருகில் உள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தின் பாடர் பள்ளத்தாக்கில் 2800 மீ உயரத்தில் உள்ள ஒரு சிறிய மலை கிராமம் மச்சைல் ஆகும். பொதுவாக மக்கள் இந்த கோயிலுக்கு சசோட்டி கிராமத்தில் இருந்து நடந்து செல்ல 2 நாட்கள் ஆகும். வழியில் அவர்கள் தங்க பல கிராமங்கள் உள்ளன. டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி குளிர்கால மாதங்களில் இந்த கோயிலுக்கு செல்ல முடியாது.

Related Stories: