- திருவாரூர்
- அரியலூர்
- திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி
- அரியலூர் மாவட்டம்
- சோழமாதேவி அம்பிகாபுரம் காலனி...
திருவாரூர்: திருவாரூரில் காதலனுடன் செல்போனில் தகராறில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் தெரிய வந்த அரியலூரில் இருந்த காதலனும் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்தார்.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அரியலூர் மாவட்டம் சோழமாதேவி அம்பிகாபுரம் காலனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகள் சுமித்ரா (19) என்பவர், பாராமெடிக்கல் பிரிவில் ரேடியோகிராபி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், தன்னுடன் படிக்கும் 10 மாணவிகளுடன் அங்குள்ள ஏ.கே.எம் நகரில் ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு தங்கி படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் சகமாணவிகள் எழுந்து பார்த்தபோது, சுமித்ராவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், மாடியில் இருந்து வெளியில் தேடிய போது வீட்டின் முன்பகுதியில் பைக் நிறுத்துவதற்காக போடப்பட்டிருந்த ஷெட் ஒன்றில் துப்பட்டாவால் சுமித்ரா தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து, தகவலின் பேரில் அங்கு வந்த திருவாரூர் நகர போலீசார், சுமித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தியதில், தற்கொலை செய்து கொண்ட சுமித்ராவிற்கும், அரியலூர் மாவட்டம் பெருமாள் நத்தம் தென்கச்சி பகுதியை சேர்ந்த சுதாகர் மகன் யுவராஜ்(21) என்பவருக்குமிடையே பள்ளி காலம் முதல் காதல் இருந்து வந்துள்ளது. வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு 10மணியளவில் காதலன் யுவராஜூடன், மாணவி சுமித்ரா செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சோகமாக இருந்துள்ளார்.அதன் பின்னர் சகமாணவிகள், தூங்க சென்ற நேரத்தில் சுமித்ரா மனஉளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில், சுமித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவலை சகமாணவிகளில் ஒருவர், அவரது காதலன் யுவராஜூக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உங்களிடம் ஏற்பட்ட தகராறில் தான் சுமித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறி உள்ளார். இதில் அதிர்ச்சிக்குள்ளான யுவராஜூம், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அரியலூர் போலீசார் மூலம் தெரிய வந்தது. காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
