சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். சேர்க்கை பெற்ற மாணவர்கள் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணையை இணைய வழியில் பெற்றுக் கொள்ளலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். மாணவர்கள் சேர்க்கை நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வரை பி.எட்., மாணவர்கள் சேர்க்கை நேரடி கலந்தாய்வின் மூலம் நடைபெற்று வந்தது. இதனால், வெளியூர்களிலிருந்து மாணவர்கள் தங்களுடைய பெற்றோருடன் சென்னை வந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளும் நிலை காணப்பட்டது. இந்த சிரமங்களைப் போக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு ஏற்ப, 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை இணைய வழியில் நடத்திட முடிவெடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் ஜூன் 20ம்தேதி முதல் ஜூலை 21ம்தேதி வரை இணைய வழியில் பெறப்பட்டன. 3 ஆயிரத்து 545 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர் கடந்த 31ம்தேதியன்று தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 21 கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 40 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளைத் தேர்வு செய்ய இணைய வழியில் கடந்த 4ம்தேதி முதல் 9ம்தேதி வரை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மாணவர்கள் சேர்க்கை நிறைவு பெற்ற நிலையில், மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை www.lwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் இன்று (14ம் தேதி) முதல் 19ம் தேதிக்குள் சேர்ந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
