கோயில் அர்ச்சகர்களின் மகன், மகள்கள் மேற்படிப்பு 600 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 உதவித்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகையாக 600 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2025-26ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில், “ஒருகால பூஜை திட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் நலன் கருதி, இந்த ஆண்டு 600 மாணவர்களின் மேற்படிப்பிற்காக ஆண்டுக்கு தலா ரூ.10,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், ஒருகால பூஜை திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்காக பள்ளி மற்றும் கல்லூரி கல்வி மேம்பாட்டு மைய நிதி மூலம் கல்வி உதவித்தொகையை 600 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா ரூ.10,000க்கான வங்கி வரைவோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதன்மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற உயர்கல்வி பயிலும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் பயன்பெறுவர். இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக பணி தொகுதியில் உதவி ஆணையர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 21 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சி.பழனி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: