124 வயதில் முதல் முறை வாக்காளர் மின்டா தேவி டிசர்ட் அணிந்து போராட்டம் நடத்திய எம்பிக்கள்: நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு

புதுடெல்லி: பீகாரில் 124 வயது மூதாட்டி மின்டா தேவி முதல் முறை வாக்காளராக சேர்க்கப்பட்ட விவகாரத்தில் அவரது உருவம் அச்சிடப்பட்ட டிசர்ட் அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற அவைக்குள் மட்டுமின்றி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று 15வது நாளாக போராட்டம் நடந்தது.

இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி கட்சி எம்பிக்கள் பலர் பங்கேற்றனர். அப்போது, பிரியங்கா காந்தி உள்ளிட்ட சில எம்பிக்கள் ‘மின்டா தேவி’ என்ற பெயர் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டிசர்ட் அணிந்திருந்தனர். அதில், மின்டா தேவி என்பவரின் புகைப்படமும், டிசர்ட்டின் பின்புறம் ‘124 நாட் அவுட்’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இது குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், ‘‘மின்டா தேவி முதல் முறை வாக்காளர். அவரது வயது 124. பீகார் வாக்காளர் பட்டியலில் அப்படித்தான் இடம் பெற்றுள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளைத்தான் நாங்கள் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். தேர்தல் ஆணையம் எப்படி பாஜ கட்சியின் ஒரு அங்கமாகி விட்டது? வாக்காளர் பட்டியல் முழுவதும் இதுபோன்ற மோசடிகள் நிரம்பி உள்ளன’’ என்றார். போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை நிறுத்து, வாக்கு திருட்டு என பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர். தற்போது உயிரோடு இருக்கும் உலகின் அதிக வயதுடைய நபர்களின் வயது 115 மட்டுமே. அதையும் தாண்டி மின்டா 124 வயதுடன் முதல் முறை வாக்காளராக இருப்பதாக பீகார் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மின்டா தேவியின் உண்மையான வயது 35 என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: