வாக்காளர் பட்டியலில் முரண்பாடா? நாடாளுமன்றத்தை கலைத்து விடுங்கள்: அபிஷேக் பானர்ஜி அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று கூறியதாவது: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைவோம் என்பதை பாஜ அறிந்ததால்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செய்ய வைத்துள்ளது. இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாநிலங்களில் மட்டும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செய்வது தவறு. வெவ்வேறு மாநிலங்களுக்கு விதிகள் வித்தியாசமாக இருக்க முடியாது. எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான விதிகள் இருக்க வேண்டும்.

எனவே, வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள், பிழைகள் இருப்பதாக தேர்தல் ஆணையம் கருதினால் முதலில் ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத்தை கலைத்து விடுங்கள். ஏனெனில் முரண்பாடான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தான் 2024ல் மக்களவை தேர்தல் நடந்துள்ளது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று தான் மோடி பிரதமர் ஆகி உள்ளார். அவரது அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டும். பிழையான வாக்காளர் பட்டியல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் வாக்களித்து தான் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். எனவே அத்தனையையும் கலைத்து விட்டு, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்துங்கள் என்றார்.

Related Stories: