புதுடெல்லி: சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியான ரூ.2,291 கோடி விவகாரம் தொடர்பாக ஒன்றிய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தரப்பில் 28 நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில், பிஎம் ஸ்ரீ பள்ளி எனப்படும் மாதிரி பள்ளிகளை உருவாக்குவது தொடர்பாக மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இது இந்தியை திணிப்பதாகக் கூறி, அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது.
இதற்கிடையே, சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய,நிதியை நிலுவையில் வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், ‘சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியான ரூ.2,291 கோடியை உடனடியாக வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், ‘‘சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியான ரூ.2,291 கோடி விவகாரம் தொடர்பாக ஒன்றிய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை மற்றும் கல்வி அமைச்சகத்தின் செயலாளர் தரப்பில் இருந்து வழக்கறிஞர் நேரில் அஜராக வேண்டும் என்று பதிலளிக்க சம்மன் அனுப்பப்படுகிறது. குறிப்பாக அடுத்த 28 நாட்களில் ஆஜராக வேண்டும். அப்போது உங்களது தரப்பு ஆவணங்களையும் சமர்பிக்கவும் தயாராக இருக்க வேண்டும். ஒருவேலை நேரில் ஆஜராக தவறினால், நீங்கள் இல்லாத நிலையில் தமிழ்நாடு அரசின் வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
