அனுமதியின்றி காட்சியை பயன்படுத்தியதால் காங்கிரஸ் கட்சி மீது நடிகருக்கு கோபம்

மும்பை: ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ என்ற புலனாய்வுத் தொடரின் காட்சியை அனுமதியின்றி தனது வாக்குத் திருட்டு பிரசாரத்திற்கு காங்கிரஸ் பயன்படுத்தியதற்கு நடிகர் கே.கே.மேனன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாலிவுட் இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ என்ற புலனாய்வுத் தொடர் வெளியானது. இதில் பாலிவுட் நடிகர் கே.கே.மேனன், ‘ஹிம்மத் சிங்’ என்ற முதன்மை புலனாய்வு அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் தொடர் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, 2021ல் இதன் இரண்டாம் பாகமான ‘ஸ்பெஷல் ஆப்ஸ் 1.5: தி ஹிம்மத் ஸ்டோரி’ வெளியானது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மையைக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில், ‘வாக்குத் திருட்டு’ என்ற பெயரில் இணையப் பிரசாரம் ஒன்றை முன்னெடுத்தது. இந்தப் பிரசாரத்திற்காக, ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ தொடரின் காட்சி ஒன்றில் நடிகர் கே.கே.மேனன் பேசிய காணொளியை, அவரது அனுமதியின்றி எடுத்துப் பயன்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் கே.கே.மேனனின் கவனத்திற்குச் சென்றதும் அவர் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தார். காங்கிரஸ் கட்சி பகிர்ந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் டேக் செய்துள்ளார்.

அதில், ‘காங்கிரஸ் கட்சியின் இந்த விளம்பரத்தில் நான் நடிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எனது ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ தொடரின் காட்சி ஒன்று, எனது அனுமதியின்றி மாற்றியமைத்து பயன்படுத்தப்பட்டுள்ளது’ என்று ஆக்ரோஷமாக பதிவு செய்துள்ளார். இவரது இந்த பதிவு அரசியல் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: