இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

பெங்களூரு: ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்தியாவின் விஸ்வரூபத்தை உலகம் அறிந்துள்ளது என பிரதமர் நரேந்திரமோடி பெருமிதத்துடன் கூறினார். டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று காலை பெங்களூரு வந்தார்.  இதைத்தொடர்ந்து சாலை வழியாக பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு-பெலகாவி வந்தேபாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு காணொலி காட்சியின் மூலமாக அமிர்தசரஸ்-ஸ்ரீமாதா வைஷ்ணவி தேவி மற்றும் நாக்பூர்-புனே வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ சேவையை அவர் தொடங்கி வைத்தார். 96.10 கி.மீ நீளமுள்ள மஞ்சள் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிய பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மற்றும் அதிகாரிகளுடன் ரயிலில் பயணம் செய்தார்.

மஞ்சள் வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் டிரைவர் கிடையாது என்றாலும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக வினிதா என்பவர் ரயிலை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் வெற்றியின் பின்னணியில் பெங்களூருவை சேர்ந்த இளைஞர்களின் பங்களிப்பும் இருக்கிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் பெரிய அளவில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆபரேசன் சிந்தூரின் பின்னணியில் மேக் இன் இந்தியா திட்டமும் இருக்கிறது. ஆபரேசன் சிந்தூரின் மூலமாக இந்தியாவின் விஸ்வரூபத்தை உலக நாடுகள் அறிந்துள்ளன. இந்தியாவில், குறிப்பாக கிராமங்களில் கூட டிஜிட்டல் பணப்பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கின்றன. உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் நமது பொருளாதாரம் நிலைத்தன்மை உடையதாகும். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது’ என்றார்.

* குறைவான நிதி தந்த ஒன்றிய அரசு முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு
நம்ம மெட்ரோ மூன்றாம் கட்ட பணிகளுக்கான அடிக்கல் விழாவில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது மெட்ரோ ரயில் மூன்றாவது கட்டத்திற்கு வந்துள்ளோம்.

இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு முதலில் பாதிக்கு பாதி என அறிவிக்கப்பட்டாலும் மாநிலத்தின் பங்களிப்பு அதிகமாகும். 96.10 கி.மீ. தூர மெட்ரோ பணிக்காக கர்நாடக அரசு ரூ.23 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. அதே நேரம் ஒன்றிய அரசு ரூ.7467.86 கோடி மட்டும் வழங்கியுள்ளது. எனவே, ஒன்றிய அரசு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.

Related Stories: