×

வீட்டில் தயாரித்த பட்டாசு வெடித்து 3 பேர் கருகி பலி: ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் உத்தரவு

ஏழாயிரம்பண்ணை: சாத்தூர் அருகே உரிய அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்தவர் பொன்னு பாண்டியன்(47). நேற்று காலை 11 மணியளவில், இவரது வீட்டில்  சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட உராய்வின் காரணமாக பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதில் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (60), சண்முகத்தாய் (55) மற்றும் ஜெகதீஸ்வரன் (15) ஆகிய 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மாரியம்மாள் என்பவர் படுகாயமடைந்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து நடந்த வீட்டை மாவட்ட எஸ்பி கண்ணன், பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் வீட்டில் பட்டாசு தயாரிக்கக்கூடாது.

போலீசார், வருவாய்த்துறையினர் இணைந்து வீடுதோறும் சோதனை நடத்த உள்ளனர். சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தெரிய வந்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, பொன்னுப்பாண்டியை கைது செய்தனர். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், பட்டாசு விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சமும், படுகாயமடைந்தவருக்கு ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

Tags : CM ,Ezhayirampannai ,Sattur ,M.K. Stalin ,Virudhunagar district… ,
× RELATED முத்திரை திட்டங்களின் (Iconic Projects)...