புதுடெல்லி: தமிழ்நாட்டில் மரக்காணம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை ரூ.2,157 கோடி செலவில் 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மரக்காணம் முதல் புதுச்சேரி வரையிலான 46 கிமீ என்எச் 332ஏ வழிச்சாலையை 4 வழிச்சாலையாக ரூ.2,157 கோடி மதிப்பில் மாற்ற ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சாலை தற்போது இருவழி தேசிய நெடுஞ்சாலை 332ஏ வாக உள்ளது. மேலும் மாநில நெடுஞ்சாலைகளைச் சார்ந்துள்ளது.
இதனால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை 4 வழிச்சாலையாக மாற்றும் போது சென்னை, புதுச்சேரி விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் போக்குவரத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டச் சீரமைப்பு 2 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் (என்எச்-32, என்எச்-332) மற்றும் இரண்டு மாநில நெடுஞ்சாலைகள் (எஸ்எச்-136, எஸ்எச்-203) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
கூடுதலாக, மேம்படுத்தப்பட்ட வழித்தடம் இரண்டு ரயில் நிலையங்கள் (புதுச்சேரி, சின்னபாபுசமுத்திரம்), இரண்டு விமான நிலையங்கள் (சென்னை, புதுச்சேரி), ஒரு சிறிய துறைமுகம் (கடலூர்) ஆகியவற்றுடன் இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலைப்பணிகள் முடியும் போது புதுச்சேரிக்கு சுற்றுலா அதிகரிக்கும். மேலும் இந்தத் திட்டம் மூலம் சுமார் 8 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும், 10 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஜ்வாலா திட்டத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடி மானியம்: 2026 நிதியாண்டிற்கான பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழ் ரூ.12,000 கோடி மானியத்தை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 10.33 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த மானிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 9 மறுசுழற்சிகளுக்கு 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி மானியம்: கடந்த 15 மாதங்களில் சந்தை விலைக்குக் குறைவான விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பிசிஎல்) ஆகிய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி எல்பிஜி மானியத்தை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இழப்பீடு தொகை 12 தவணைகளாக வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கல்விக்கு ரூ.4200 கோடி நிதி
நாடு முழுவதும் உள்ள 175 பொறியியல் நிறுவனங்கள் மற்றும் 100 பாலிடெக்னிக் கல்லூரிகளை உள்ளடக்கிய 275 தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்துறை கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் ஆராய்ச்சி மேம்பாடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். இந்த திட்டம் 2025-26 முதல் 2029-30 வரையிலான காலத்திற்கு ரூ.4,200 கோடி மொத்த நிதிச் சுமையைக் கொண்ட ஒன்றிய அரசு திட்டமாகும். இதற்கான நிதியான ரூ.4,200 கோடியில், உலக வங்கியிடமிருந்து ரூ.2,100 கோடி கடனாக பெறப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.
