காஞ்சிபுரத்தில் விதிமுறைகளை மீறி இயங்கிய 278 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம், ஆக.6: காஞ்சிபுரம் ஆர்டிஓ எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய 278 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவின்படி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் பொது சாலைகளில் செல்லும் வாகனங்களை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது, அதிகப்படியான சுமை ஏற்றிய சரக்கு வாகனங்கள் தகுதி சான்று, புதுப்பிக்காத அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்கள், வரி செலுத்தாத வாகனங்கள், தார்பாலின் மூடாத வாகனங்கள், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் என போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட 278 வாகனங்கள் கண்டறியப்பட்டது. அதன்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை சிறை பிடித்து அபராதம் விதித்த வகையில், ஜூலை மாதத்தில் 22 லட்சத்து 3 ஆயிரத்து 445 ரூபாய் அபராத தொகையாக வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது வாகன சோதனை நடைபெறும் என்றும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு அதிகப்படியான பயணிகளையும், பள்ளி குழந்தைகளுக்கு ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: