புதுடெல்லி: தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விளம்பரங்களில், அரசியல் தலைவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருத்தார். இதையடுத்து மேற்கண்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது.
மேலும் அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அதேபோல ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது. எனவே, தமிழ்நாடு அரசு புதிதாக தொடங்க உள்ள மற்றும் அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சர்களின் புகைபடத்தையோ பயன்படுத்தக் கூடாது. இருப்பினும் அரசு நலத்திட்டம் தொடங்குவதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும் எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் பி.வில்சன் ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் ஒரு முறையீட்டை வைத்தனர்.
அதில், பிரதமரின் புகைப்படங்களை தவிர வேறு எதையும் திட்டங்களுக்கு பயன்படுத்த கூடாது என உச்ச நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்துள்ளது. ஆனால் ஒரு திட்டத்திற்கு தலைவர்களின் பெயர்களை ஏன் பெயரிடக் கூடாது?. அப்படி எதுவும் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடவில்லை. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் எங்களது தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். எனவே அரசு திட்டங்களில் காலதாமதம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் விதமாக மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இதுசார்ந்த மனுவை புதன்கிழமை அதாவது நாளை பட்டியலிட்டு விசாரிப்பதாக உத்தரவிட்டார்.
