9ம் நூற்றாண்டை சேர்ந்த பிடாரி சிற்பம் குளத்தூர் அருகே பெரியசாமிபுரத்தில் கண்டெடுப்பு

குளத்தூர் : குளத்தூர் அடுத்த பெரியசாமிபுரம் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த பிடாரி சிற்பம் உள்ளதாக கிராம மக்கள் தகவல் அளித்தனர். அதன்ேபரில் அங்கு விரைந்துசென்ற பாண்டியநாட்டு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் குணசேகரன், தொல்லியல் ஆய்வாளர் தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் அச்சிலை பாண்டியர் காலத்தை சேர்ந்த மிகவும் பழமையானது என்பது தெரிய வந்தது.

இந்த சிலை சிற்பம் பிடாரி என்ற ஏகவீரி ஆகும். ஆரம்ப காலங்களில் தாய் தெய்வ வழிபாடு மிகச்சிறப்பாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம் இந்த சிலை சிற்பமாகும். தவ்வை, கொற்றவை, சப்தமாதர்கள் என பல்வேறு தாய் தெய்வ வழிபாடுகள் இருந்தாலும், இந்த சிற்பங்கள் அனைத்தும் ஊருக்குள் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன ஆனால் இந்த ஏகவீரி சிறப்பானது. ஊரின் எல்லைப்பகுதியிலேயே பெரும்பாலும் கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டது.

இவருக்கு எல்லைப்பிடாரி என்ற மற்றொரு பெயர் உண்டு. தலையில் கரண்ட மகுடத்துடனும், கழுத்தில் ஆபரணங்களுடனும், கைகளில் கை வளைவிகளுடன் காட்சி தருகிறார். வலது காதில் பிடாரி உருவத்திற்கோ உரித்தான பிரேத குண்டலமும், இடது காதில் பத்ர குண்டலமும் உள்ளது. எட்டு கரங்களுடன் காட்சி தரும் இந்த அன்னையின் வலது மேற்கையில் சூலாயுதமும், அதற்கு அடுத்த கையில் உடுக்கையும், அதற்கு அடுத்த கையில் உடுக்கையும், அதற்கு அடுத்த கையில் வாளும், அதற்கு அடுத்து குறுவாளும் காணப்படுகிறது.

இடது மேற்கையில் பாசமும், அடுத்த கைகளில் கேடயம், அசுரனின் தலையும் காணப்படுகிறது. இடது மேற்கையை தனது தொடையில் வைத்து ஊருஹஸ்த்துடன் காட்சி தருகிறார். ஊரு என்பது தொடையை குறிக்கும். வலது காலை சற்றே மடித்து உட்குதி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அழகாக இடது காலை அதிபங்க கோலத்தில் வைத்திருக்கிறார்.

அரசர் காலத்தில் இவர் போர் தெய்வமாக வணங்கியுள்ளனர். இவரை வணங்கிவிட்டு போருக்கு சென்றால் நிச்சயம் போரில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை அதிகமாக இருந்ததினால். போருக்கு செல்வதற்கு முன்பாக இவரை வணங்கி சென்றதாக செவிவழி ெசய்தி நிலவுகிறது. இவர் காளியின் அம்சமாகவும், மிகவும் உக்கிரத்துடன் இருப்பதால் ஊரின் காவல் தெய்வமாக காணப்படுகிறது. சிற்பத்தின் உயரம் நான்கடி, அகலம் இரண்டடி ஆகும்.

கிராம மக்கள் இவரை ஆரியம்மன் என்ற பெயரில் வணங்கி செல்கின்றனர். மேலும் இப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ மக்களும் இவருக்கு பொங்கலிட்டு வழிபட்டு வருவது தனிச்சிறப்பாகும். அத்துடன் இந்த சிற்பம் 9ம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் குறிப்பிடும் கிராம மக்கள், இதுபோன்ற தொன்மையான சிற்பங்களை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 9ம் நூற்றாண்டை சேர்ந்த பிடாரி சிற்பம் குளத்தூர் அருகே பெரியசாமிபுரத்தில் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: