×

பிளஸ் 2 தேர்வில் 95.03% பேர் தேர்ச்சி; கடந்த ஆண்டைவிட அதிகமானோர் பாஸ்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார். தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 7518 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் தேர்வில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். இதில், 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பேர் மாணவிகள். சிறைவாசிகள் 145 பேர். மார்ச் 25ம் தேதி தேர்வு முடிந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் உடனடியாக தொடங்கின. அதன்படி, தமிழகத்தில் சுமார் 80 மையங்கள் அமைக்கப்பட்டு 40 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

முன்னதாக, மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் மே 9, 19ம் தேதிகளில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். இருப்பினும் ஒரு நாள் முன்னதாகவே நேற்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது. பிளஸ்2 தேர்வு முடிவுகளை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் ெபாய்யாமொழி வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: பிளஸ் 2 தேர்வை இந்த ஆண்டில் 7,92,494 மாணவ, மாணவியர் எழுதினர். அவர்களில் 4.19,316 பேர் மாணவியர். 3,73,178 பேர் மாணவர்கள். தேர்வு எழுதியோரில் தேர்ச்சி பெற்றவர்கள் 7,53,142 பேர். தேர்ச்சி சதவீதம் 95.03%. கடந்த ஆண்டை விட இது 0.47 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56% ஆக இருந்தது. இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த தேர்வில் 10049 பேர் பங்கேற்கவில்லை. மாணவியரில் 4,05,472 பேர் (96.70%) தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம் மாணவர்களில் 3,47,670 பேர் (93.16%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வெழுதிய 8,019 மாற்றுத்திறனாளி மாணாக்கர்களில் 7,466 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 140 சிறைவாசிகளில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வெழுதிய 16,904 தனித்தேர்வர்களில் 5,500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பள்ளிகளை பொறுத்தவரையில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி 91.94%, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி 95.71%, தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தேர்ச்சி 98.88%. மாவட்ட வாரியாக தேர்ச்சியை பொறுத்தவரையில் அரியலூர் மாவட்டம் 98.82 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றிருக்கிறது. தேர்ச்சி விகிதத்தில் அரியலூருக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் 97.98 சதவீதம் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் 97.53 சதவீதம் பெற்று 3வது இடத்தில் உள்ளது. இதற்கடுத்த இரண்டு இடங்களில் கோவை 97.48 சதவீதமும், கன்னியாகுமரி 97.01 சதவீதமும் பெற்றுள்ளன.

6ம் இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 90.96 சதவீதம், 7வது இடத்தில் சிவகங்கை மாவட்டம் 96.71 சதவீதம், 8வது இடத்தில் விருதுநகர் மாவட்டம் 96.64 சதவீதம், 9வது இடத்தில் பெரம்பலூர் மாவட்டம் 96.58 சதவீதம், 10வது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் 96.19 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் அரியலூர் மாவட்டம் 3ம் இடம் பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது. அதேநேரம் கடந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருந்தது, இந்த ஆண்டு 3ம் இடம் பிடித்திருக்கிறது.பள்ளிகள் மேலாண்மை வாரியான தேர்ச்சி சதவிகிதத்தில், அரசுப் பள்ளிகள் 91.94%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.71%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.88% தேர்ச்சியை எட்டியுள்ளன.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதியாக http://resultsdigilocker.gov.in, www.tnresults.nic.iஎன்ற இணைய தளங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாணவ, மாணவியர் இந்த இணைய தளங்களில் தங்களின் பதிவு எண்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களை பொறுத்தவரையில் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டு செல்போன் எண்ணுக்கும், தனித் தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்தார்.

 

The post பிளஸ் 2 தேர்வில் 95.03% பேர் தேர்ச்சி; கடந்த ஆண்டைவிட அதிகமானோர் பாஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,School Education Minister ,Anbil Mahesh Poyyamozhi ,Tamil Nadu ,Ariyalur district ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்