சென்னை: 60 வயதுக்கு மேற்பட்ட 15,089 மீனவர்களுக்கு சிறப்பினமாக ரூ.5000 மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரினை களைந்திட 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட கடலோர மீனவ குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழிகாட்டுதலின்படி பயனாளி முழுநேர மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவராகவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் (BPL) வசிப்பவராகவும் மற்றும் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில், 2023-24ம் ஆண்டிற்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்துள்ள தகுதியான 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறாத 15089 மீனவர்களுக்கு சிறப்பினமாக ரூ.5000 மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அவ்வறிப்பின்படி இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
The post 60 வயதுக்கு மேற்பட்ட 15,089 மீனவர்களுக்கு சிறப்பினமாக ரூ.5000 மீன்பிடி தடைக்கால நிவாரணம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு appeared first on Dinakaran.
