×

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை நாட்டில் 2,710 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1 உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டுமென தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை, அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் பரவலாக காணப்படுகிறது. எனவே மாவட்ட சுகாதார அலுவலர்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளில் ஈடுபட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக இன்புளுயன்சா உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்களை பரிமாற வேண்டும்.

தொற்று காணப்படும் பட்சத்தில் அதற்கான கள மருத்துவ குழு அதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் உள்ளிட்டவைகள் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொருத்து தேவையான படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் தங்களது கைகளை சோப்பினால் சுத்தமாக கழுவ வேண்டும். சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தல் முக்கியம். கூட்டமான மற்றும் பொது இடங்களுக்கு மக்கள் செல்லும் போது முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை ஊக்கப்படுத்த வேண்டும். இருமல், தும்மல் வரும் போது கைக்குட்டையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கைகளால் கண், காது, வாய் ஆகிய உறுப்புகளை தொடுவதை தவிர்த்தல் அவசியம். பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி இருப்பவர்களை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருத்தல் அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! appeared first on Dinakaran.

Tags : Union Health Department ,India ,Tamil Nadu ,
× RELATED தவெக நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழா...