4 நாட்கள் தொடர் விடுமுறை விமான கட்டணம் திடீர் உயர்வு

சென்னை: சுதந்திர தின விழா தொடர் விடுமுறையால், சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்வதால், சென்னையில் விமான டிக்கெட் கட்டணங்கள பல மடங்கு உயர்ந்துள்ளன. சுதந்திர தின விழாவையொட்டி, இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை. மறுநாள் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை எடுத்தால், அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை. இதையடுத்து தொடர் விடுமுறையாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்ததால், சென்னை நகரில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

இவர்கள் ரயில், பேருந்துகளில் சென்றால், 4 நாட்கள் விடுமுறையில் 2 நாள் பயணத்திலே கழிந்து விடும். இதனால் ஒன்றரை மணி நேரம் பயணமான, விமான பயணத்தை விரும்புகின்றனர். இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. இந்த விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதன் காரணமாக, வழக்கம் போல், விமான டிக்கெட் கட்டணங்களும், பல மடங்கு உயர்ந்துள்ளன.

* சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.4,301. ஆனால் இன்று நாளை கட்டணம் ரூ.10,796
* அதைப்போல் சென்னை- மதுரை கட்டணம் ரூ.4,063. இன்றும் நாளையும் கட்டணம் ரூ.11,716
* சென்னை- திருச்சி கட்டணம் ரூ.2,382. ஆனால் இன்றும் நாளையும் கட்டணம் ரூ.7,192
* சென்னை- கோவை கட்டணம் ரூ.3,369. இன்று நாளை ரூ.5,349
* சென்னை- சேலம் கட்டணம் ரூ.2,715. இன்று நாளை கட்டணம் ரூ.8,277
சுதந்திர தின விழா தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விமானங்களில், இதை போல் பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தாலும், டெல்லி, மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் உயரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

The post 4 நாட்கள் தொடர் விடுமுறை விமான கட்டணம் திடீர் உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: