மழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 4 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: சோகத்தில் விவசாயிகள்

நெல்லை: மழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 4 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பயிர் சேதங்கள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதிகளில் பெய்த பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததில் நெல், வாழை பயிர்கள் நீரில் மூழ்கின. தென்காசியில் வெள்ளப்பெருக்கு இல்லை என்றாலும் அந்த மாவட்டத்தின் கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தது. அது மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழையால் ஆங்காங்கே குளங்கள் உடைந்து வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிசான பருவத்தில் மட்டும் 70 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அம்பை, சேரன்மகாதேவி, முக்கூடல், பாளையங்கோட்டை வட்டாரங்களில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். இதற்காக பாபநாசம் அணையிலிருந்து கடந்த மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. நாற்று நட்டு பயிர்கள் 25 நாட்களை கடந்திருந்த நிலையில், கடந்த 17,18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத மழை கொட்டியது. இதில் குளங்கள், கால்வாய்களில் உடைப்புகள் ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததில் நெற்பயிர்கள் மூழ்கின. பாளையங்கோட்டை சீவலப்பேரி பகுதிகளில் தண்ணீரால் மணல் அடித்து வரப்பட்டு விளைநிலங்களை மூடி விட்டன. பல இடங்களில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகி விட்டன. நெல்லை மாவட்டத்தில் நெற்பயிர்கள், மக்காச்சோள பயிர்கள், உளுந்து பயிர்கள் 50 ஆயிரம் ஏக்கரில் சேதம் அடைந்துள்ளன. தென்காசி மாவட்டத்திலும் 50 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, கருங்குளம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், புதூர், சாத்தான்குளம், வைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, விளாத்திகுளம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள நிலங்களை மழைநீர் சூழ்ந்து 3 லட்சம் ஏக்கரில் நெல் மற்றும் வாழைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, வைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, எட்டயபுரம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த தோட்டப் பயிர்களும் நாசமாகியுள்ளன. மழையால் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையடுத்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் மழையால் சேதமடைந்த பயிர்கள், வாழைகள், தோட்டப் பயிர்கள், இதர பயிர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

The post மழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 4 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: சோகத்தில் விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: