40 கி.மீ.க்கு மேல் வேகமாக வண்டி ஓட்டக்கூடாதா? சும்மா ஆய்வுக்கு தான்.. பைன் போட மாட்டோம்: போக்குவரத்து காவல் துறை விளக்கம்

சென்னை: சென்னையில் பகலில் 40 கிலோ மீட்டர் இரவில் 50 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், வாகன ஓட்டிகளின் எதிர்ப்பை தொடர்ந்து மாநகர போக்குவரத்து காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னை மாநகரில் பகலில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கிலோ மீட்டர் வேகமும், இரவில் 10 மணி முதல் காலை 7 மணிவரை 50 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்களில் வேகமாக சென்றால் வழக்குப் பதிவு செய்து 500 வசூலிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஒரு ஸ்பீட் ரேடார் கன் ரூ.1,81,130 என்ற விலையில் 30 ஸ்பீட் ரேடார் கன் மொத்தம் ரூ.54,33,900 மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டது.

முதற்கட்டமாக வேகத்தை அளவிடும் ஸ்பீட் ரேடார் கன் கருவிகள் சென்னை மாநகர காவல் எல்லையில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் ஸ்பென்சர் சிக்னல், தேனாம்பேட்டை சிக்னல், ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை சந்திப்பு, மீனபாக்கம் விமான நிலையம் சந்திப்பு, சேத்துப்பட்டு டெய்லர்ஸ் சாலை சந்திப்பு, பாரிமுனை சந்திப்பு, அமைந்தகரை புல்லா அவென்யூ சந்திப்பு, திருமங்கலம் எஸ்டேட் சாலை சந்திப்பு, கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் சந்திப்பு, மதுரவாயல் பகுதி என 10 இடங்களில் ‘ஸ்பீட் ரேடார் கன் மற்றும் ஏ.என்.பி.ஆர் கேமராவுடம் அமைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 20 ஸ்பீட் ரேடார் கன் பொருத்துவதற்கான இடங்களை போக்குவரத்து போலீசார் தேர்வு செய்து வருகின்றனர். மாநகர போக்குவரத்து போலீசாரின் வேகம் அளவிடும் கருவியின் செயல்படுகள் குறித்து அறிவிப்புக்கு, சென்னையில் வாகன ஓட்டிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சாலை வசதிகள் சரியாக இல்லாத நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பொதுமக்களிடம் அபராதம் வசூலிப்பதிலேயே குறியாக இருப்பதாக சமூக வலைத்தளங்கள் மூலம் குற்றம் சாட்டினர்.

இதை தொடர்ந்து, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் ஸ்பீட் ரேடார் கன் குறித்து விளக்கம்அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு வரம்பு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது 10 இடங்களில் அமைக்கப்பட்ட ஸ்பீட் ரேடார் கன் ஆய்வுக்காக மட்டும் தான் பொருத்தப்பட்டுள்ளது. அந்த கருவி மூலம் தற்போது அபராதம் விதிக்கப்படமாட்டாது. வெவ்வேறு நேரங்களில் சாலைகளில் உள்ள தொலைவுகளை வைத்து வேகங்களை கணக்கிட்டு, அதன் பிறகே வேக கட்டுப்பாடு குறித்து இறுதி முடிவு செய்யப்படும். அதுவரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 10 ஸ்பீட் ரேடார் கன் மூலம் அனுப்பும் தகவல்கள் ஆய்வுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 40 கி.மீ.க்கு மேல் வேகமாக வண்டி ஓட்டக்கூடாதா? சும்மா ஆய்வுக்கு தான்.. பைன் போட மாட்டோம்: போக்குவரத்து காவல் துறை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: