உங்கள் மௌனம் இந்தியா ஒரு போதும் மன்னிக்காது: 38 கட்சிகளுடன் பேச நேரம் உள்ளது.. ஆனால் மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் இல்லையா?: மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

டெல்லி: 38 கட்சிகளுடன் பேச நேரம் உள்ளது; ஆனால் மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் இல்லையா ? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் மெய்டீஸ் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் பயங்கர கலவரம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறைகள் நடந்தன. வன்முறையில் ஈடுபட்ட குக்கி தீவிரவாதிகள் பலரை பாதுகாப்பு படை சுட்டு கொன்றது. அங்கு நடந்த வன்முறையில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமைதியை நிலைநாட்டுவதற்கு போலீசாருடன் இணைந்து ராணுவமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்துச் சென்று ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றம் இழைத்தவர்களை தீவிரமாக தேடி வருவதாக அம்மாநில போலீசார் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் கடந்த மே மாதம் 4ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்; கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவாகியுள்ளது. இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது மோடி அரசும் பாஜகவும் மாநிலத்தின் நுட்பமான சமூக அமைப்பை அழித்து ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பெருங்குற்றமாக மாற்றியுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவிதுள்ளார்.

உங்கள் மௌனத்தை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது. நீங்கள் மணிப்பூரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசி, மத்தியிலும் மாநிலத்திலும் உங்கள் இரட்டை இயலாமைக்கு மற்றவர்களைக் குற்றம் சொல்லாமல், என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் 38 கட்சிகளுடன் பேச நேரம் உள்ளது; ஆனால் மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் இல்லையா ? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று மணிப்பூர் பிரச்னையை காங்கிரஸ் எழுப்பும் என்றும் கார்கே தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post உங்கள் மௌனம் இந்தியா ஒரு போதும் மன்னிக்காது: 38 கட்சிகளுடன் பேச நேரம் உள்ளது.. ஆனால் மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் இல்லையா?: மல்லிகார்ஜுன கார்கே கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: