மரக்கிளைகளை உரசிச் செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம் மின்வாரிய அதிகாரிகள் கவனிப்பார்களா?

கம்பம், டிச. 7: கம்பத்தில் மரங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டிக்கு செல்லும் சாலையில் சட்ரஸ் வாய்க்கால் வரை இருபுறமும் புளியமரங்கள் அதிகமாக உள்ளன. இந்த மரங்களுக்கு இடையே மும்முனை (த்ரீ பேஸ்) மின்சார கம்பிகள் செல்கின்றன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், கடைகள் மற்றும் செங்கல் காளவாசலுக்கு இந்த மின் கம்பிகள் மூலம் மின்விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மின்வாரியத்துறை முறையாக பராமரிக்காததால், மின்கம்பிகள் தாழ்வாகவும், மரக்கிளைகளை உரசியும் செல்கின்றன. ஒருசில இடங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை புளியமரத்தில் இழுத்து கட்டியுள்ளனர். தற்போது காற்றுடன் மழை பெய்து வருவதால் மரங்கள் ஈரப்பதத்துடன் உள்ளன. காற்று அடிக்கும் போது மின்கம்பிகள் மரத்தில் உரசி மின்சாரம் பாய்கின்றன. இதனால், மழை காலங்களில் மழைக்காக மரத்திற்கு அடியில் ஒதுங்கும் வாகன ஓட்டிகள் மரத்தை தொட்டால் ஷாக் அடிப்பதாக கூறுகின்றனர். எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: