12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன் நாளை ஆலோசனை: சங்கப் பிரதிநிதிகளுடன் 3 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை சட்டத் திருத்த மசோதா குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நாளை தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது. இதற்கான பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவையில், தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்டம் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், வரும் 24ம் தேதி (நாளை) பிற்பகல் 3 மணிக்கு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு சட்டப்பேரவையில், நேற்று முன்தினம் 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டமுன்வடிவு (எண்.8/2023) தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின்படி, அவசியம் ஏற்பட்டால் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் 4 நாட்களுக்கு 12 மணி நேர வேலை திட்டத்தை அமல்படுத்தலாம். அப்படி 4 நாட்கள் 48 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 3 நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும், எந்த தொழிலாளர்களையும் கட்டாயப்படுத்த கூடாது, 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த சட்ட முன்வடிவை, சட்டப்பேரவையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் உள்பட பெரும்பாலான கட்சிகள் எதிர்த்தன. சட்டமுன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்தில் இருந்த, தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் இந்த சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை விளக்கி கூறி, இந்த திருத்தத்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும், சட்டமன்றத்திலேயே தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் விரிவாக விளக்கினர்.

ஆனாலும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துகளை தெரிவித்து வருவதால் நாளை (24ம் தேதி) மதியம் 3 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமை செயலாளர் இறையன்பு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துகளை தெரிவித்து வருகின்றன. இதனால் நாளை (24ம் தேதி) மதியம் 3 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணேசன் இதில் பங்கேற்கின்றனர்.

The post 12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன் நாளை ஆலோசனை: சங்கப் பிரதிநிதிகளுடன் 3 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: