×

அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு; அண்ணாமலையாருக்கு 1008 கலசாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைந்ததையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. கோயிலில் அதிகளவு பக்தர்கள் அலைமோதுவதால் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்தது. எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு மார்ச் மாதத்தில் 106 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கத்தரி வெயில் காலம் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. காற்று சுழற்சி மற்றும் முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

இதனால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைந்தது. பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் அக்னி நட்சத்திரமும் இன்றுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி நட்சத்திர பரிகார நிவர்த்தியாக திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4ம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற்று வந்தது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சுவாமி சன்னதி கருவறையில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர், இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் சிந்தியடி குளிர்விக்கப்பட்டது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைவதால் அண்ணாமலையார் கோயிலில் அக்னி தோஷ நிவர்த்தி பரிகார பூஜைக்காக 1008 கலச அபிஷேகம் காலை நடைபெற்றது.

இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதற் கால கலச பூஜையும், நேற்று காலை 2வது கால கலச பூஜையும், மாலை 3வது கால கலச பூஜையும் நடைபெற்றது. இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு கோபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 7 மணிக்கு 4வது கால கலசபூஜை நடைபெற்றது. காலை 11 மணிக்கு உச்சிகால பூஜையில் அண்ணாமலையாருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அக்னி நட்சத்திர நிறைவாக இன்றிரவு 8 மணிக்கு அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் மாடவிதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிய ஒரு சில நாட்களே உள்ளதால் வெளியூர் பக்தர்களின் வருகை இன்றும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு; அண்ணாமலையாருக்கு 1008 கலசாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Agni Star ,1008 Galasaphishek ,Tiruvannamalai ,Galasaphishek ,Swami ,Annamalaiyar Temple ,Tamil Nadu ,1008 Galasaphishek for Annamalai ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்