10 ஆண்டுகள் பிரிந்திருந்த நிலையில் தம்பதி மீண்டும் சேர வாய்ப்பு இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: கணவனும் மனைவியும் திருமணமாகி 10 ஆண்டுகள் பிரிந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு விவாகரத்து வழங்க மறுத்த குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் குணால் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் சாவித்திரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் 1997ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதையடுத்து, ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தனர். இதனிடையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, குணால் தனக்கு விவாகரத்து கோரி 2014ல் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் குணாலின் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து குணால் உயர் நீதிமன்றதில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.மோகன்தாஸ் ஆஜராகி, மனுதாரர் தொடர்ந்த விவாகரத்து வழக்கை எதிர்த்து மனுதாரரின் மனைவி தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று எந்த மனுவையும் குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. கணவரின் விருப்பத்திற்கு அவர் இணங்கவில்லை. கணவர் இல்லாமல் தனியாக சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளார். இருவரும் 10 ஆண்டுகள் பிரிந்த நிலையில் அவர்களின் திருமண உறவு பாதிக்கப்பட்டுள்ளதாக கருதி விவாகரத்து வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை குடும்பநல நீதிமன்றம் கவனிக்க தவறி விட்டது என்று வாதிட்டார்.சாவித்திரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்ரார் முகமது அப்துல்லா வாதிடும்போது, இருவரும் 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். மனுதாரர் தனது மனைவிக்கு குழந்தை பாக்கியத்திற்காக பல மருத்துவ சோதனைகளை மேற்கொண்டதால் அவரது மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2013 முதல் மனுதாரரின் மனைவி தனது நியாயமான செலவைக்கூட சமாளிக்க முடியாமல் திண்டாடியுள்ளார். கணவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறார். அதன் அடிப்படையில்தான் குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்துள்ளது என்று வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு: மனுதாரர் வருமான வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க தனக்கு ₹43 லட்சம் வரை பணம் அனுப்பினார் என்று மனைவி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, மனைவி மீது மனுதாரர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதை மனுதாரரின் மனைவி குடும்பநல நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. தனது கணவரின் அன்பை பார்க்காமல் அவரது சொத்து மற்றும் பணத்தின் மீதுதான் அதிக கவனம் செலுத்தியதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும், கணவரை விட்டு பிரிந்து 10 ஆண்டுகள் தனியாக வாழ்ந்துள்ளார். இந்த காலகட்டம்தான் இருவரும் சந்தோசமாக வாழும் காலம். அதை தவறவிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கில் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோரும் கேள்வி எழவில்லை. 10 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்திருந்தாலே விவாகரத்து வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. எனவே, குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் தனது மனைவிக்கு ₹2.5 லட்சம் ஒருமுறை ஜீவனாம்சமாக வழங்கியதை இந்த நீதிமன்றம் பதிவு செய்கிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது….

The post 10 ஆண்டுகள் பிரிந்திருந்த நிலையில் தம்பதி மீண்டும் சேர வாய்ப்பு இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: