சிவகாசி பஸ்நிலைய விரிவாக்க பணி பாதியில் நிற்கும் அவலம்

சிவகாசி, மார்ச் 15: சிவகாசி புதிய பஸ்நிலையம் கட்டும் பணிகள் பாதியில் நிற்பதால் சேதமடைந்து வருகிறது. இரவு நேரங்களில் புதிய பஸ் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. புதிய பஸ்நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகாசி பழை பஸ் நிலையம் 2.5 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள 1.5 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ் நிலையம் கட்டி விரிவு படுத்தும் பணி கடந்த 2006ம் ஆண்டு துவங்கியது.பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்ப்பட்ட இந்த பஸ் நிலையத்தில் 14 கடைகள், புதிய பஸ் நிறுத்தம், நவீன கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது புதிய வணிக வளாகம், வாறுகால், தரைதளம், பஸ் நிறுத்த பிளாட் பார்ம் கட்டும் பணி மட்டும் முடிவடைந்துள்ளது. இதன் பின்னர் எந்த பணிகளும் நடைபெறவில்லை. கடந்த பல மாதங்களாக புதிய பஸ் நிலையத்தில் கட்டுமானப் பணி நடைபெறாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் புதிய பஸ் நிலையத்தின் வணிக வளாகத்தில் சமூக விரோதிகள் தங்கி வருகின்றனர். இரவு நேரங்களில் சிலர் சமூக விரோத  செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் புதிய பஸ் நிலையம் கடந்த பல மாதங்களாக செயல்படாமல் முடங்கிக் கிடப்பதால் கட்டிடங்கள் சேதமடைந்து வருகிறது. சாலையோரங்களில் தங்கி வியாபாரம் செய்வோர் சிவகாசி புதிய பஸ் நிலையத்தில் டெண்ட் அடித்து தங்குகின்றனர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் சுகாதார கேடு உண்டாகிறது. இது தவிர வேன், ஆட்டோ உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பகல் நேரங்களில் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி செல்கின்றனர்.இதனால் புதிய பஸ்நிலையம் தற்காலிக வாகன நிறுத்தமாக மாறி வருகிறது. சிவகாசி புதிய பஸ்நிலையம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.ஆனால் இதுவரை பஸ்நிலையம் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் அரைகுறையாக நிற்கிறது. பஸ் நிலைய விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பழைய பஸ் நிலையத்ததில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் வாகன பெருக்கத்தால் பயணிகள் அவிதிப்படுகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன பெருக்கத்தால் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தும் நிலவுகிறது. எனவே சிவகாசி புதிய பஸ்நிலைய விரிவாக்க  பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: