கத்திவாக்கத்தில் ₹2.20 கோடியில் மீன் மார்க்கெட் அமைக்க டெண்டர் விட்டு 2 ஆண்டாகியும் பணி

தொடங்கவில்லை

* வியாபாரிகள் சரமாரி குற்றச்சாட்டு

* இடியும் நிலையில் பழைய கட்டிடம்

சென்னை, பிப். 14:  கத்திவாக்கத்தில் ₹2.20 கோடி செலவில் மீன் மார்க்கெட் கட்டுமான பணிக்கு டெண்டர் விடப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இடிந்து விழும் நிலையில் பழைய  மார்க்கெட் கட்டிடம் இருப்பதால் வியாபாரிகள் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  திருவெற்றியூர் மண்டலம் கத்திவாக்கம் பஜார் தெருவில் மீன் மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கானோர் தினமும் இந்த மீன் மார்க்கெட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்த  மார்க்கெட்டில் பல  கடைகள் திறந்த வெளியில் இருப்பதால் மழை மற்றும் வெயில் காலத்தில் வியாபாரம் செய்யும் மீனவர்களும், மீன்களை வாங்க வரும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். இங்கு குடிநீர் வசதியும் இல்லை. வியாபாரம் முடிந்த பின் சுத்தம் செய்வதற்கு தண்ணீர் இல்லாததால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். சுகாதாரமின்றி துர்நாற்றம் வீசுவதால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு  தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும்  பயன்படுத்த முடியாமல் உள்ள பழைய மார்க்கெட் கட்டிடங்களும், கழிவறையும் பழுதடைந்துள்ளது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இந்த மீன்  மார்க்கெட்டை சீரமைத்து தர வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘கடந்த 2016ம் ஆண்டு ₹2 கோடியே 20 லட்சம் செலவில் புதிய மீன் மார்க்கெட் கட்ட திட்டமிடப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதன்படி தரை தளங்களுடன் கூடிய சுமார் 30 கடைகளும்,  குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவறை, கழிவுநீர் தொட்டி  போன்ற அனைத்து வசதிகளும் கொண்ட நவீன மார்க்கெட்டாக அமைய உள்ளதாக கூறப்பட்டது.

 டெண்டர் விடப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் துவக்கப் படாமல் கிடப்பில் உள்ளது. இதனால் எப்பொழுதும் போல சுகாதாரமில்லாத மார்க்கெட்டையே வியாபாரிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி  வருகின்றனர். மேலும் பழைய மீன் மார்க்கெட்  மற்றும் கழிவறை கட்டிடங்கள் மிக மோசமாக பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அச்சமாக உள்ளது. இந்த மீன் மார்க்கெட் கட்டுமான பணியை துவக்க வேண்டும் என்று  பொதுமக்கள் மாநகராட்சி கட்டுமான பிரிவு அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பல  வியாபாரிகள் இந்த மார்கெட்டுக்கு வராமல் சாலையோரங்களில்  வியாபாரம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது’’ என்றனர்.

Related Stories: