வரும் கல்வியாண்டில் பொருளாதாரம், கணிதம் பொது பாடத்திட்டம் அறிமுகம்

அவனியாபுரம், பிப். 13: வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு பொருளாதாரம், கணிதம் பொது பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரை பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் கல்லூரி நிறுவனர் தினம், பொன்விழா மலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. கல்லூரி தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பொன்விழா மலரை வெளியிட்டு பேசுகையில், ‘‘வீட்டில் 50 வயதுக்கு மேல் ஒருவர் இருந்தால் கடவுள் உங்கள் வீட்டின் கதவை தட்டுகிறார் என அர்த்தம். 60 வயதுக்கு மேல் இருந்தால் அவர் உங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார் என அர்த்தம். அதுவே 70 வயதுக்கு மேல் இருந்தால் கடவுள் உங்கள் வீட்டில் குடியிருக்கிறார் என நினைத்து கொள்ளுங்கள். அவர்களின் அனுபவம் நமக்கு மிகவும் தேவையானது. இதுபோல் கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளால்தான் 8 சதவீதம் இருந்த பெண் கல்வி தற்போது 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரிசியில் எழுதிய குழந்தைகள் இன்று கணினியில் எழுதி கொண்டிருக்கின்றனர். எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு செய்தால் உங்களுக்கு உதவிட ஒருவர் காத்துக்கொண்டிருப்பார். இதுதான் வாழ்க்கை. இனிமேல் மாணவர்கள் யாரும் கணிதம், பொருளாதாரம் படிக்காமல் இருக்கக்கூடாது என புது விதிகளை உருவாக்கி வருகிறோம். இது வரும் கல்வி ஆண்டில் பொதுவான பாடத்திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏனெனில் நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரியாதவர் கல்விகற்றவர் அல்ல என்ற சூழ்நிலை வரவுள்ளது’’ என்றார். முன்னதாக முதல்வர் கண்ணன் வரவேற்க, முன்னாள் பேராசிரியர் மரியஜோசப் சேவியர், துணை முதல்வர் கிருஷ்ணன், பேராசிரியர் ஜெயக்கொடி வாழ்த்துரை வழங்கினர். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: