ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரில் துப்புரவு பணி சுணக்கம்: நோய் பாதிப்பில் மக்கள்

ஆலந்தூர்: மேற்கு வேளச்சேரி 177வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர், சாஸ்திரி நகர், கக்கன்நகர் போன்ற பகுதிகளில் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சமீப காலமாக துப்புரவு பணிகள் சரிவர நடைபெறாததால், எங்கு பார்த்தாலும் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.  இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.  இந்த பகுதிகளில் தனியார் நிறுவனம் மூலம் குப்பைகள்  அள்ளும் பணி நடந்து வந்தது. இடையில் திடீர் என துப்புரவு பணி நிறுத்தப்பட்டது. தற்போது அந்த நிறுவனத்திடமே   சென்னை  மாநகராட்சி நிர்வாகம்  குப்பை அகற்றும் பணியினை மீண்டும்  ஒப்படைத்தது.

இந்த நிறுவனத்தினர் சரிவர  ஆட்களை பணி அமர்த்தாததால் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது.  இதனை கேட்பாரற்று திரியும் மாடுகளும்,  தெருநாய்களும்  உணவுக்காக கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால், அப்பகுதியில் குழந்தைகள் முதல் சிறியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிபடும் நிலை உள்ளது. குறிப்பாக ஆதம்பாக்கம்  பிருந்தாவன் நகரில் உள்ள 177வது வார்டு அலுவலகம்,  துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் என இதனை  சுற்றியுள்ள பகுதிகளில்தான்  குப்பைகள் அதிகமாகக் காணப்படுகிறது.  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும், எந்தவித  நடவடிக்கையும் இல்லை, என்று குற்றம்சாட்டுகின்றனர். எனவே, இந்த குப்பை கழிவுகளை  உடனடியாக அகற்ற  மாநகராட்சி அதிகாரிகள்  சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினருக்கு உத்தரவிட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: