தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் பள்ளத்தால் விபத்து அபாயம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

தாம்பரம்: தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள கிரைஸ்ட் கிங் மகளிர் பள்ளி அருகில் அந்தோணி தெரு, சாலமன் தெரு, கம்பர் தெரு, சுதர்ஸவரர் கோவில் தெரு, பாபுஜி தெரு, சக்கரவாதி தெரு உள்ளிட்ட ஏராளமான தெருக்கள் உள்ளன. இதில் ஏராளமான பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் அனைத்தும் செல்லுவதற்கு தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையோரம் மழைநீர் கால்வாய் பணிக்காக தாம்பரம் நகராட்சியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் பல நாட்களாக அப்பகுதியில் தாம்பரம் நகராட்சியால் தோண்டப்பட்ட ராட்சத பள்ளம் மூடப்படாமல் உள்ளது.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில்  பள்ளிகள், மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மாணவ-மாணவியர்கள் பொதுமக்கள், தாம்பரத்தில் இருந்து பல்வேறு பணிக்காக இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், பேருந்துகளும் நடந்து  செல்லும் ஏராளமான பொதுமக்கள் அந்த பள்ளத்தில் சிக்கி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் அந்த சுற்றுவட்ட பகுதிகளில் மூன்று தனியார் பள்ளிகள், இரண்டு அரசு பள்ளிகள்  உள்ளதால் மாலை நேரங்களில் அங்கு பேருந்துக்காக சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் வந்து காத்துக்கிடக்கின்றனர்.

இதனால் தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் தினமும் மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். இவ்வாறு கூட்ட நெரிசலின்போது பள்ளி மாணவ-மாணவியர்கள் அங்கு தாம்பரம் நகராட்சியில் தோண்டி கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே அங்குள்ள பள்ளத்தை மூடவேண்டும் என பொதுமக்கள் சார்பில் தாம்பரம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: