முதல் மனைவிக்கு கணவர் கொடுத்துவிடுவாரோ என பயந்து நகை, பணம் திருடு போனதாக நாடகமாடிய 2வது மனைவி

அம்பத்தூர்: அம்பத்தூர், வெங்கடாபுரம் கே.கே.ரோடு, 14வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (53). இவர், ஆவடி அடுத்த காட்டூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவரது இரண்டாவது மனைவி உஷா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். சீனிவாசனின் முதல் மனைவி பார்வதி. இவர், ஆவடியை அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இதற்கிடையில், கடந்த 30ம் தேதி சீனிவாசன் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அப்போது, அவருக்கு கம்பெனியிலிருந்து பண பயன்களாக 6.5 லட்சம் ரொக்கப்பணம் வந்தது. இந்த பணத்தை அவர் வீட்டு பீரோவில் வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3.30மணி அளவில் உஷா,  சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, வீட்டில் 25 வயது மதிக்கதக்க நபர் வீட்டிற்குள் புகுந்து எனது தாலி செயினை பறித்ததோடு இல்லாமல், பீரோவில் இருந்த 8 சவரன் நகை, 6.5 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டான் என்று கூறியுள்ளார். அதன்பேரில் அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கர்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உஷாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஜன்னல் வெளியே உஷாவின் தாலி செயின் கிடந்தது தெரியவந்தது. மேலும், போலீசார் சோதனையில் வீட்டு சமையலறையில் குக்கரில் 6.5 ரொக்கப் பணமும், 8 சவரன் தங்க நகையும் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் உஷாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொள்ளை போனதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சீனிவாசன் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்தை அவர் முதல் மனைவிக்கு மற்றும் மகனுக்கும் கொடுத்து விடுவார் என பயந்து கொள்ளை போனதாக உஷா நாடகமாடி இருப்பது தெரியவந்தது என்றனர். இதனையடுத்து போலீசார் உஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Related Stories: