பருவமழை முன்னெச்சரிக்கை குப்பை அள்ளும் பணி தொடர்ந்து கண்காணிப்பு

சென்னை, டிச.  7: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நிருபர்களிடம் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில்  சென்னை மாநகராட்சி தயார்நிலையில் உள்ளது. பருவ மழையினை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மண்டலங்களிலும் 660 மோட்டார் பம்புகள், 371 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 130 ஜெனரேட்டர்கள், 18 உயர்நிலை கோபுர விளக்கு வாகனங்கள், 63 ஹைட்ரோலிக், லேடர் வாகனங்கள், 145 டிப்பர் லாரிகள், 23 ஜே.சி.பி வாகனங்கள், 44 மருத்துவக் குழுக்கள் மற்றும் கொசு மருந்து புகை அடித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க 4 மத்திய சமையற்கூடங்கள் சிந்தாதிரிப்பேட்டை, பேசின்பிரிட்ஜ், பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் கோபாலபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் கூவம், அடையாறு பகுதிகளில்  மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 95  சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. கோவளம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு 270 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தம் போடப்படும். கொசஸ்தலை ஆற்றில் வடிகால் அமைக்கும் பணி மீண்டும் தொடங்குவதற்கு மத்திய அரசு உதவி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான  பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

இதைபோன்று சாலை அமைக்கும் பணிக்கு 440 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் பழுதடைந்த  சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். மாநகராட்சி டெண்டர்களில்  முறைகேடுகள் இருந்து தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பை முறையாக அள்ளப்படவில்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை அள்ளப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மெரினா கடற்கரையில் முன்பெல்லாம் கடைகள் ஆங்காங்கே இருந்ததால் குப்பைகளும் ஆங்காங்கே போடப்பட்டது. தற்போது அனைத்து கடைகளும் இரண்டு வரிசையாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: