ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி முதல்வர் நியமனத்திற்கு ஒப்புதல் மறுத்த வழக்கு : சென்னை பல்கலை. பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி முதல்வரின் நியமனத்திற்கு ஒப்புதல் மறுத்த சென்னை பல்கலைக்கழகத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை பல்கலைக்கழகம் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் செயலாளரான சூசன் மேதிகல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மூத்த பேராசிரியையாக பணியாற்றிய ரோஸி ஜோசப் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 2018 ஜூன் 6ல்  முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதல்வரின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஜூன் 19 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் சென்னை  பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பினோம். ஆனால் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படி, எங்களது கல்லூரி முதல்வரின் நியமனத்திற்கு, பல்கலைக்கழக நியமனக்குழுவிடம் முன்அனுமதி பெறவில்லை எனக்கூறி ஒப்புதல் வழங்க பல்கலைக்கழகம் மறுத்து விட்டது.

எங்களது கல்லூரி சிறுபான்மையின கல்லூரி என்பதால் முதல்வரின் நியமனம் தொடர்பான யுஜிசி விதிமுறைகள் எங்களுக்குப் பொருந்தாது. பல்கலைக்கழக மானியம் மற்றும் சம்பளம் போன்ற செயல்பாடுகளுக்காக கல்லூரி முதல்வரின் நியமனத்திற்கு  சென்னை பல்கலைக்கழகத்திடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே புதிய முதல்வரின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். புதிய முதல்வரின் பணிகளில் இடையூறு செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சார்பில் மூத்த வக்கீல் ஐசக் மோகன்லால் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு சென்னை பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டதுடன், மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை கல்லூரி முதல்வரின் செயல்பாடுகளுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார். வழக்கு 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: