3வது நாளாக லாரி உரிமையாளர்கள் போராட்டம் சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடும் அவலம்

துரைப்பாக்கம், டிச. 6: சென்னை ராஜிவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் 3வது நாளாக, போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.  எனவே அதிகாரிகள் உடனே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   சென்னை ராஜிவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பள்ளிக்கரணை மேடவாக்கம், கோவிலம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடை வசதி கிடையாது. இந்த பகுதியில் உள்ள வீடுகள்,  அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனத்தில் தொட்டி அமைக்கப்பட்டு, கழிவுநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீரை ஒரு லாரிக்கு ₹450 முதல் ₹600 வரை கட்டணம் செலுத்தி தனியார் லாரிகள் மூலம் அகற்றி பெருங்குடியில் இருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊற்றப்படுகிறது. ஒரு லாரிக்கு, ₹100 கட்டணம்  செலுத்தப்படும். மீதமுள்ள தொகை பெட்ரோல், லாரி வாடகை, டிரைவர் சம்பளமாக பயன்படுத்தப்படும்.

இந்நிலையில் மெட்ரோ வாட்டர் சார்பாக கடந்த 1ம் தேதி முதல் லோடு ஒன்றுக்கு ₹250 கட்டணம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கு, லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, துரைப்பாக்கம் 200 அடி  சாலையோரத்தில் லாரிகளை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று 3வது நாளாக கழிவுநீர் லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் தனியார் ஐ.டி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் உடனே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: