மழை பெய்தும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் தண்ணீர் இல்லை வரத்து கால்வாய்களை ஆய்வு செய்ய உத்தரவு: பராமரிப்பு நிதியில் இருந்து மேற்கொள்ள பொறியாளர்களுக்கு அறிவுரை

சென்ைன, டிச. 6: மழை பெய்தும் தண்ணீர் வரவில்லை என்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் வரத்து கால்வாய்களில் ஆய்வு செய்ய பொறியாளர்களுக்கு மண்டல தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 1ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.  இந்த மழை காரணமாக  சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை. இதற்கு, ஏரிகளுக்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கால்வாய்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதால், நீர் கடத்தும் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும்  தெரிகிறது. மேலும், வரத்து கால்வாய்களில் இருந்து தண்ணீர் ஏரிகளுக்கு செல்லாமல் திருப்பி விடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தும் தண்ணீர் குறைவாக ஏரிகளுக்கு  வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, நேற்று முன்தினம் 78 மிமீ சோழவரம் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தும் 46 கன அடி மட்டுமே தண்ணீர் வந்துள்ளது. அதே நேரத்தில் 13.4 மி.மீ செம்பரம்பாக்கம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தும் ஒரு  சொட்டு நீர் வரத்து கூட இல்லை. இதை பார்த்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து வரத்து கால்வாய்களில் தற்காலிக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள பொறியாளர்களுக்கு மண்டல தலைமை பொறியாளர் ஜெயராமன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான செலவை பராமரிப்பு நிதியில் இருந்து  மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரத்து கால்வாய்களில் இருந்து தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யவும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதன் மூலம் நீர் பிடிப்பு பகுதிகளில்  பெய்யும் மழை நீரை கூடுதலாக பெற முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: