சாத்தூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும்

சிவகாசி, நவ.8: நாளுக்குநாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாத்தூரில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்ட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

இடைத்தேர்தல் நடைபெற உள்ள சாத்தூர் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகாலமாக ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கோரிக்கை மனுக்களாக அரசு பைல்களில் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப சாத்தூர் நகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகின்றது. சாத்தூர் அருகே சிப்காட் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. சாத்தூர் தொகுதியில் பிரதான தொழிலாக தீப்பெட்டி தொழில் உள்ளது. சிறு தொழில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில் ரேஷன் கடைகளில் தீப்பெட்டிகளை விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாத்தூரில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்ட வேண்டும் என்று, கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  ஆனால், புதிய பஸ் ஸ்டாண்டு கட்டவந்த நிதியை வட்டியுடன் நகராட்சி நிர்வாகம் திருப்பி செலுத்திவிட்டதால் மக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

மக்கள் கூறுகையில், ‘‘தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கி 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த பணிகள் இதுவரை முடிந்தபாடில்லை. அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாத்தூர் பகுதியில் வேண்டாங்குளம் கண்மாய் உட்பட பல கண்மாய்கள் தூர்வாரப்படாமல் மேடாக காட்சியளிக்கின்றன. சாத்தூர் படந்தால் சந்திப்பு ஹைவேஸ் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும், சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் உள்ள ரயில்வே கிராசிங் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும், ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்த வேண்டும், தரமான சாலைகள், தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: