29வது வார்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் கழிவுநீரில் மிதக்கிறது மேலப்பாளையம் கரீம் நகர்

நெல்லை, நவ. 8:  நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட 29வது வார்டில் கரீம் நகர், அமுதா பீட் நகர், ராஜா நகர், ஆமீன்புரம் 12 தெருக்கள், நேரு நகர், பாத்திமா நகர், தாய் நகர், அல்அமீன் நகர், நியூ காலனி, சித்திக் நகர் என மேலப்பாளையத்தின் விரிவாக்க பகுதிகள் காணப்படுகின்றன.  இவ்வார்டில் சுமார் 50க்கும் மேற்பட்ட தெருக்களும், 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர்.இதில் கரீம் நகரில் பாதாள சாக்கடை வசதிகள் இல்லை. எனவே மழைநீர் கழிவுநீரோடு சேர்ந்து தெருக்களில் தேங்கி நிற்கிறது. காலி மனைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற வழியில்லை. தெருக்கள் மற்றும் சாலைகள் கழிவுநீரால் அடைபட்டு கிடக்கிறது. இப்பகுதியில் தெருவிளக்கு, குப்பைகள் தொட்டி வசதிகளும் தேவையான அளவு இல்லை.

அமுதா பீட் நகரிலும் கழிவுநீர் செல்ல வழியின்றி ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் சாலையில் நடந்து செல்லவே பெற்றோரின் உதவியை நாடுகின்றனர். ஆமீன்புரத்தில் பாதாள சாக்கடை போடப்பட்டாலும் முறையாக செயல்பாட்டில் இல்லை. எனவே தெருக்களின் பின்புறம் கழிவுகள் தேங்கி நிற்கின்றன. தற்போது மழைநீரும் சேர்ந்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.மேலப்பாளையத்தின் விரிவாக்க பகுதிகளில் தற்போது டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில், மருத்துவமனைகளில் அவர்கள் குவிந்து வருகின்றனர். மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் 29வது வார்டில் கிருமி நாசினி தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகள் முறையாக நடப்பதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மேலப்பாளையம் பகுதி தலைவர் தேயிலை மைதீன் கூறுகையில், ‘‘29வது வார்டில் கழிவுநீர் செல்ல முறையான வசதிகள் கேட்டும், தெருவிளக்குகள் கேட்டும் இருமுறை மேலப்பாளையம் மண்டலம் உதவி கமிஷனரிடம் மனு அளித்து விட்ேடாம். அதிலும் கரீம் நகரில் எங்கு பார்த்தாலும் மழைநீரும், கழிவுநீர் கலந்து ஓடுகிறது. போதிய குப்பைத் தொட்டிகள் இல்லை. சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையும் அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் தெருக்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை தயங்குகின்றனர். முறையான கழிவுநீரோடைகள், தெருவிளக்குகள், தண்ணீர் தேங்காத சாலைகளை அமைத்து தர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.

கல்வித்துறை, அரசுப்பள்ளியில் குட்டையாக தேங்கிய மழைநீர்நெல்லை டவுன் ஆர்ச் அருகே அரசு கல்வித்துறை வளாகம் உள்ளது. இங்கு கல்வி மாவட்ட அலுவலகங்கள், கல்வி தேர்வுத்துறை அலுவலகம் மற்றும் அரசுப்பள்ளி ஆகியவை செயல்படுகின்றன. இதனால் இங்கு ஏராளமான அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் துறை தொடர்பான ஆசிரியர்கள், கல்வித்துறையினர் வந்து செல்கின்றனர். இந்த வளாகத்தில் உள்ள மைதானம் சரியாக பராமரிக்கப்படவில்லை. ஏற்கனவே பள்ளத்தில் உள்ள இப்பகுதி அருகே சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டவுடன் மேலும் பள்ளமாக மாறியது. முறையான சுற்றுச்சுவரும் இல்லை. பின்பகுதியில் வயல்வெளியாக உள்ளன. இதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி மைதானமே குட்டைப்போல் மாறியுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் கல்வித்துறைக்கு சொந்தமான பழைய உடைந்த பயன்படுத்தப்படாத வாகனங்களும் நீண்ட வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. வாகனங்களுக்குள் கொசுக்கள் மற்றும் விஷஜந்துகள் குடியிருப்பு நடத்துகின்றன. தேங்கி கிடக்கும் நீர் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த வளாகத்திற்கு வருபவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.  எனவே தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதுடன் மைதானத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: