ஆசிரியை வீடு உட்பட 2 வீடுகளின் பூட்டை உடைத்து 57 சவரன் கொள்ளை டாஸ்மாக் கடையிலும் 2 லட்சம் அபேஸ்

சென்னை: ஆசிரியை வீடு உட்பட 2 வீடுகள் மற்றும் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 57 சவரன் நகை 3 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் மாடர்ன் சிட்டி, 4வது தெருவைச் சேர்ந்தவர் இம்மானுவேல் (47). தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சாந்தி (40). திருநின்றவூர் தாசர்புரத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு எஸ்தர் என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் மதியம் எஸ்தருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர் எஸ்தரை அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்து இரவு 10 மணியளவில் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 42 சவரன் நகை, 1.08 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

* சென்னை ஜாபர்கான்பேட்டை ஜவஹர்லால் நேரு தெருவில் தமிழக அரசின் டாஸ்மாக் கடையில் புகுந்த மர்ம ஆசாமிகள் கல்லா பெட்டியில் வைத்திருந்த 2 லட்சத்தை கொள்ளையைடித்து சென்றுள்ளனர்.

* கொருக்குப்பேட்டை, சண்முகராயன் தெருவை சேர்ந்த நிர்மலா (37) என்பவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், பீரோவில் வைத்திருந்த  15 சவரன் மற்றும் 4,500 ஆகியவற்றையை  கொள்ளையடித்து சென்றனர்.

* அம்பத்தூர் அடுத்த பாடி, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (34). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுதா (30). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் தம்பதியருக்கிடையே ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* அயனாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்த மீனா (40) என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

* பெருங்குடி, கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகர், கணபதி தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (55), டெய்லர். இவரது வீட்டில் உள்ள கிணற்றை நேற்று முன்தினம் தூர்வாரும் போது, விஷவாயு தாக்கி வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகர், 3வது தெருவை சேர்ந்த ஆறுமுகம் (52), அதே பகுதியை சேர்ந்த குமார் (45) ஆகியோர் பரிதபாமகா உயிரிழந்தனர். புகாரின்பேரில், போலீசார் அஜாக்கிரதையாக இருந்து உயிர்சேதம் ஏற்படுத்தியதற்காக 304 ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டு உரிமையாளர் லட்சுமணன் (55) என்பவரை கைது செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

* எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னையை சேர்ந்த விமலேஷ் (38) என்பவர் தவறவிட்ட 17 ஆயிரத்து 500 அடங்கிய பையை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு விமலேஷின் நண்பரான தாம்பரம் பகுதியை சேர்ந்த மன்ஜை லாலிடம் நேற்று ஒப்படைத்தனர்.

மெத்தை நிறுவன தீ விபத்து: 2 பேர் கைது

மடிப்பாக்கம் வள்ளல்குமணன் தெருவை சேர்ந்தவர் ஹர்பன் சிங் (55). இவர் ஆழ்வார்பேட்டை டிடிகே. சாலையில் உள்ள மூன்று அடுக்குமாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் மெத்தை தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையம் வைத்துள்ளார். இரண்டாவது தளத்தில் பயிற்சி மையம், மூன்றாவது தளத்தில் ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை இரவு 11.45 மணிக்கு ஹர்பன் சிங் நடத்தி வரும் மெத்தை விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

புகாரின்பேரில், இரண்டாவது தளத்தில் 8 மாதங்களாக தங்கி வேலை செய்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த  பள்ளன் மிஸ்ரா (26) மற்றும் மந்தைவெளியை சேர்ந்த மணிக்குமார் (25) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இருவரும் விபத்து நடந்த அன்று, மதுபோதையில் சிகரெட்டை பற்றவைத்து தீக்குச்சியை அணைக்காமல் தரை தளத்தில் உள்ள மெத்தை கடை ஜன்னலுக்குள் வீசியது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: