அனைத்து ஓட்டல்களிலும் உணவுகளுக்கு ஒரே மாதிரியாக விலை நிர்ணயிக்க கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: அனைத்து ஓட்டல்களிலும் உணவுகளுக்கு ஒரே மாதிரியான விலையை நிர்ணயிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒய்.அக்பர் அகமது என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், அனைத்து சைவம் மற்றும் அசைவம் ஓட்டல்களில் உணவு வகைகள் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஒட்டல் விலைக்கும் மற்ற ஒட்டல் விலைக்கும் ஒரே பொருளுக்கு ஏகப்பட்ட வித்தியாசம் உள்ளது.  இந்த விலையை ஒரே சீராக இருக்குமாறு நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்கு கடந்த 2017 செப்டம்பர் 27ம் தேதி மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவைப் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:  பொதுநல வழக்கில் நீதிமன்றத்தின் நடைமுறைக்குள் கடந்த 1970ல் வந்தது. பொது நலவழக்கு என்பது அரசியலமைப்பில் உரிமை என்று கோரப்பட்டு பல்வேறு கோரிக்கைகளுடன் தொடரப்படுகிறது. அடிப்படை உரிமை உள்ளது என்பதற்காக உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் பொது நல வழக்குகள் தொடரப்படுகின்றன. பொதுநல வழக்குகள் விளம்பரத்திற்காக தொடரப்படுவது வாடிக்கையாகிவிட்டது. தற்போது, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்படுகின்றன. இதுபோன்ற வழக்குகளால் நியாயமான வழக்குகளை விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் பொது நல வழக்கு தொடர்வது சட்டப்படி உரிமை என்பதை ஏற்க முடியாது. இதை உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது. அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறினால் நீதிமன்றத்தை அணுகலாம். பல்வேறு விதமான ஓட்டல்கள் உள்ள நிலையில், அனைத்து ஓட்டல்களிலும் ஒரே விதமான விலையை உணவுப்பொருட்களுக்கு விதிக்கக் கோர முடியாது. இந்த வழக்கு அபராதம் விதிக்கக்கூடிய வழக்கு. ஆனால், நாங்கள் அதை செய்ய விரும்பவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  

Related Stories: