சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடி நாள் நிதி நன்கொடையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொடிநாளை ஒட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார். கூற்றுடன்று மேல்வரினும் தம்முயிர்க்கு அஞ்சாது, கூடி எதிர்நிற்கும் ஆற்றலான நம் முப்படை வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக மனமுவந்து, தாராளமாக நிதியளித்து நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம் என முதல்வர் கேட்டு கொண்டுள்ளார்.

இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களைத் தாங்கி, நாட்டுப்பற்று என்கிற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக தவம் இருக்கிற முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, நம் சேமிப்பின் ஒரு பகுதியை ஒப்படைக்கும் உன்னதத் திருநாள், இந்தக் கொடிநாள் என்று கூறியுள்ளார்.

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்து, நாட்டின் அத்தனை பகுதிகளையும் பத்திரப்படுத்தும் உத்தமச் செயலை சமரசம் செய்து கொள்ளாமல், உயிரைத் துச்சமென மதித்து, சீருடைக்குள் தங்கள் எண்ணச் சிறகுகளையெல்லாம் ஒடுக்கி, ஆசைகளையெல்லாம் குறுக்கி, பகைவர்களை விரட்டும் ஒப்பற்ற செயலை மேற்கொள்கின்ற படை வீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவது நம் மகத்தான கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

படை வீரர்களின் வாழ்க்கை, நம் இல்லத்தைப் பார்த்துக்கொள்ள நாடே அணிதிரண்டு நிற்கிறது என்கிற நன்னம்பிக்கை ஒளிவீச, கொடி நாளுக்கு கொடுக்கும் நம் கொடையே அத்தாட்சி. அது அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு வகைகளில் பயன் தரும். கொடி நாளில் பெரும் தொகையை வசூலித்துத் தருகிற செயலில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.

இந்த ஆண்டும் பெருமளவில் நிதி வழங்கி, அவர்தம் குடும்பத்தினருக்கு வணக்கத்தையும், நன்றியையும் காணிக்கையாக்கிட, உங்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ள நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி வழங்கினார். இந்நிகழ்வின் பொது அமைச்சர் கே.என் நேரு, தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு, பொதுப்பணித்துறை செயலாளர் டி.ஜகந்நாதன், பொதுத்துறை சிறப்பு செயலாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நல இயக்குனர் வ.கலையரசி, முன்னாள் படைவீரர் நல கூடுதல் இயக்குநர் மேஜர்.வி.எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

Related Stories: