குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்: ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு

துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக சேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் மணிசேகர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் குடியிருப்புகளை அகற்ற நேற்று வந்தனர். அப்போது, தாங்கள் வசித்து வரும் குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெத்தேல் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் பெத்தேல் நகர் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நீலாங்கரை போலீசார் அப்பகுதியில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்புக்காக குவித்தனர்.

பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மின்சாரத்தை துண்டித்து சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் அவர்களை சமாதானபடுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், 20 பேர் மட்டும் சாலை மறியலை கைவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் மீதம் உள்ள அப்பகுதி மக்கள் பெத்தேல் நகர் பிரதான சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: